தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "மக்களவைத் தேர்தலில் திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. அண்ணா காட்டிய கொள்கையில் உறுதியாக இருந்து தொடர்ந்து திமுகவுடன் பயணிப்போம்.
திமுக தலைமையில் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும். மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும். திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது இப்போதே எழுதப்பட்ட ஒன்று. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம்.
நடிகர் ரஜினிகாந்த் உண்மையில் கட்சி தொடங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார். அவர் சொன்னதை செய்து வந்தார். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனை படி அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் கூறியதை வரவேற்கிறேன். அவர் மிகவும் வருந்தி இந்த முடிவு எடுத்துள்ளார். அவரை புண்படுத்தி மீம்ஸ் போடுவதை தவிர்க்க வேண்டும். தமிழருவி மணியன் பண்பானவர். அவரை இழிவு படுத்தக்கூடாது.
திமுக சார்பாக முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு பின்னால் பாஜக அரசு இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுக அரசு அழுத்தம் தர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தக்கோரி, முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!