சென்னை: பிராட்வே முதல் ஐயப்பன் தாங்கல் வரை செல்லக்கூடிய 26 எண் கொண்ட பேருந்தானது, கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் காவல்துறை பூத் பேருந்து நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்துகொண்டே அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைக் கண்ட சகபயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உள்ளே ஏறி வரும்படி பல முறை மாணவர்களை அறிவுறுத்திய போதும் கேட்காததால், பேருந்தை நிறுத்தி மாணவர்களைப் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பியோடி உள்ளனர். அதனால் பேருந்தின் பின் பின்புறம் இருந்த கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
பின்னர் ஓட்டுநர் உடனடியாக அந்த பேருந்தை கே.கே நகர் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரைத் தந்து தமிழ் தாயைக் காத்தவர்கள் நாங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்