சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் (28). இவர் மீது ரத்தினபுரியைச் சேர்ந்த குரங்கு ராம் கொலை வழக்கு உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, மோதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளை கோயம்புத்தூர் போலீசார் தீவிரமாக தேடியும் கைதும் செய்து வருகின்றனர். அந்க வகையில் கவுதம் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், ரவுடி கவுதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நா்ன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிதடியில் ஈடுபட்டு வந்தேன். என் மேல் 10 முதல் 15 வழக்குகள் உள்ளன. திருமணத்துக்குப் பிறகு எந்த விவகாரத்திலும் ஈடுபடவில்லை. மனைவி, மாமியார், அவரது சகோதரி மீது காவல் துறையினர் கஞ்சா வழக்குப் போட்டுள்ளனர். என் மீது 7 வழக்கில் பிடிவாரண்ட் உள்ளது. இதற்காக என்னைக் காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல பார்ப்பது நியாயம் இல்லை. நான் திருந்தி வாழ நினைக்கிறேன்.
சரணடைந்துவிடு இல்லாவிட்டால் சுட்டுப் பிடிக்க வேண்டியிருக்கும் என்று காவல் துறையினர் மிரட்டுகின்றனர். போலீசாரிடம் சரணடைய பயமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. முன்னதாக, கஞ்சா வழக்கு தொடர்பாக கவுதமின் மனைவி, அவரது சகோதரி, மாமியார் ஆகியோரை காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்திருந்தனர்.
சமீப காலமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பல்வேறு வழக்குகளில் இருந்து தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை பிடிக்க செல்லும்போது அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். அவர்கள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயலும் போது சுட்டுப்பிடிக்க வேண்டிய இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இப்படி 5 சம்பவங்களில் காவல் துறையினர் சுட்டுப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனைப் பார்த்து ரவுடி கவுதம் பயந்து வீடியோ வெளியிட்டதோடு மட்டுமல்லாது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைய வந்துள்ளார். இன்று மகளிர் தினம் என்பதால் சரணடையாமல் திரும்பி சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை ஆபரேஷன் பிடிவாரண்ட் என்ற சிறப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதால், பல நாளாக விசாரணைக்கு சிக்காத ரவுடிகளையும் குற்றவாளிகளையும் பிடிக்க காவல் துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர். இனி வழக்குகளில் இருந்து தப்ப முயன்றால் சுட்டு பிடித்து விடுவார்களோ என்ற அச்சம் ரவுடிகள் மத்தியில் பரவியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பல ரவுடிகள் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்துக்கு படையெடுப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஓடி வந்த யானை..குழந்தையை கண்டதும் திரும்பிச் சென்ற நெகிழ்ச்சி!