சென்னை: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ரவுடி வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த ரவுடியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு நகர் பகுதியில் வசித்து வருபவர் சுகுமார் (வயது 36). இவர் மயிலாப்பூர் காவல் நிலைய சந்தித்திர பதிவேடு குற்றவாளி, சி கேட்டகிரி ரவுடி பட்டியலில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி மாலையில் சரித்திர பதிவேடு தணிக்கை செய்வதற்கு சுகுமாரை காவல் நிலையத்திற்கு வரும்படி மயிலாப்பூர் போலீசார் அழைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல் நிலையம் சென்ற சுகுமார் தணிக்கை செய்து கொண்டு இருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
பின்னர், அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர். இந்த நிலையில் சுகுமார் நேற்று (நவ. 2) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்ர். ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுகுமார் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சுகுமாரின் உறவினர்கள் மருத்துவமனையில் வைத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுகுமாரின் சகோதரர் பாஜகவில் மாவட்ட நிர்வாகியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!
மேலும், சுகுமார் தற்போது எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் தினமும் வேலைக்கு செல்கிறார் எனவும் காவல் நிலையத்தில் சுகுமாரை மனரீதியாக துன்புறுத்தியதால் தான், அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சுகுமாரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து போலீசார் தரப்பு கூறுகையில், "சுகுமார் மீது ஏழு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்காணிப்பது வழக்கமான ஒன்று தான்.
சுகுமார் காவல் நிலையம் வரும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். காவல்துறையினர் எந்த வகையிலும் அவரை துன்புறுத்தவில்லை" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!