சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளது என ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர். இது குறித்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், ஆளுநர் இது குறித்து முடிவு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இது குறித்து மத்திய அரசும் நான்கு நாள்களில் ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் எனத் தெரிவித்திருந்தது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுவிப்பு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புவதாகக் கூறி இருந்தனர்.
இந்நிலையில் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக, ஆளுநர் தரப்பு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த முடிவை உள்துறை அமைச்சகத்தின் மூலமாக, உச்ச நீதிமன்றத்திலும் பிரமாண பத்திரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே பேரறிவாளன் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு வரும் 9ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.