திரைப்பட நடிகரும் சென்னை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ-வுமான நடிகர் சந்திரசேகர் குறித்த காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த காணொலியில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன், பணியில் இருக்கும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காலால் எட்டி உதைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக் கண்டு பலரும் நடிகர் சந்திரசேகரை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "சமூக வலைதளத்தில் காவலர்களை மிரட்டுவது போன்ற ஒரு காணொலி பரவி வருகிறது. அந்த காணொலியில் காவலர்களைத் தாக்குவது வாகை சந்திரசேகர் என எருக்காகுளம் கலியப்பன், சஞ்சய் ஆகியோர் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். காவல் துறையினரை எட்டி உதைப்பது நான் இல்லை.
மேலும் கோவை சத்யன் என்பவர் திமுகவின் பெயரை கெடுக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றார். இதனால் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே திமுகவின் பெயரைக் கெடுக்கும் வகையில் பதிவிட்ட மூன்று நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களை தரக்குறைவாக பேசியது முன்னாள் எம்.பி., அர்ஜூனன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றால் வழக்கம் போல செயல்படலாம்' - சென்னை மாநகராட்சி ஆணையர்