சென்னை: சென்னை தலைமைச் செயலகத்திற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வருகை தந்து மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதியைத் திறந்து வைத்தார்.
பிறகு தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வந்த போது, தலைமைச் செயலக சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கி நின்றது.
அதனைக் கண்டு சுதாரித்த காவல்துறையினர் முதலமைச்சரின் கான்வாய் வாகனம் நான்கு அடி தூரத்திலிருந்தாலும் உடனடியாக பாதுகாப்பு வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழியை ஏற்பாடு செய்தனர். பிறகு தமிழக முதலமைச்சரின் கான்வாய் வாகனத்திற்கு காவல்துறையினர் வழிவிட்டனர்.
நேற்றைய தினம் தமிழக அரசு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாணை வெளியிட்ட நிலையில், இன்று முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட இந்த நிகழ்வு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினர் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!