சென்னை: 2002ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், டென் பின் பவுலிங்க் என்ற பிரிவில் தங்கம் வென்றவர் சேக் அப்துல் ஹமீது. நில மோசடி விவகாரம் தொடர்பாக இவர் மீது பள்ளிக்கரணையில் அளித்த புகாரானது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடகள வீரர் ஷேக் அப்துல் ஹமீது அளித்த புகாரில், "நான் டெல்லியை அடிப்படையாக வைத்து ஏ.ஹெச்.ஏ. புரோஜெக்ட் என்ற கட்டுமானம், ரியல் எஸ்டேட் பெயரில் பல்வேறு நாடுகளில் தொழில் செய்துவருகிறேன். சென்னை பல்லாவரத்தில் அலுவலகம் வைத்து 15 ஆண்டுகளாகப் பழகிவரும் அசமத்துல்லா என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறேன்.
அவர், மூலமாக பாலாஜி, மீனா ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. நிலம் வாங்கிக் கொடுக்கும் விவகாரத்தில் என்னை 23 கோடி ரூபாய் மோசடி செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளித்தபிறகு மஸ்ஜித் அஜ்முதின் என்பவர் புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டினார். சென்னையில் எந்தத் தொழிலும் செய்யக் கூடாது என மிரட்டலும் விடுத்தார்.
தொடர்ந்து விசாரித்தபோது, அம்சதுல்லா திட்டமிட்டு பணத்தை பறிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது. தன்னுடைய மற்ற சொத்துகளையும் அபகரிக்கும் முயற்சியில், அம்சதுல்லா, மஸ்ஜித் அஜ்முதின், மீனா, பாலாஜி, நிவாஸ் என்ற வழக்கறிஞர் ஈடுபடுகின்றனர்.
கோவிலம்பாக்கத்தில் உள்ள 4.12 ஏக்கர் நிலத்தில் அத்துமீறி நுழைந்த நிறுவன பலகைகளை உடைத்துள்ளனர். இந்தச் செயல்களுக்கு காவல் ஆய்வாளர் ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பள்ளிக்கரணை காவலர்களிடம் இது தொடர்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஹமீது வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான 5 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்கில் 1.70 லட்சம் ரூபாய் கொள்ளை