சென்னை: திமுக எம்.எல்.ஏ-வின் வாகன அடையாள அட்டையைப் போன்று போலியான அட்டையைப் பயன்படுத்திய இருவர் மீது, போலியான ஆவணத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர் பரந்தாமன். இவருக்கு டோல் மற்றும் தலைமை செயலகத்திற்குள் செல்வதற்காக வாகன அடையாள அட்டை ஒன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாஸ் போன்றே போலியாக வேறொன்றை தயாரித்து அடையாளம் தெரியாத நபர்கள் வெகு நாள்களாக பயன்படுத்தி வருவதாக எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு புகார்கள் வந்துள்ளன.
இதனையடுத்து அவரின் நேர்முக உதவியாளர் நாராயணன் கீழ்பாக்கம் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் புரசைவாக்கம் ராமசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்த அபுபக்கர்( 28) மற்றும் மொய்தீன் ஆகியோர் பயன்படுத்தி வரக்கூடிய காரில் எம்.எல்.ஏ பரந்தாமனின் வாகன அடையாள அட்டையைப் போன்று போலி அடையாள அட்டை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இருவர் மீதும் போலியான ஆவணத்தை தயாரித்து முறைகேடாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:'மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்க முடியாது' - சீமான் காட்டம்!