சென்னை: சைதாப்பேட்டை, சேஷாசலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளைஞர்கள் மோகன்ராஜ் உட்பட சிலர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திடீரென அறைக்குள் வெளிச்சம் தெரிவதை மோகன்ராஜ் கண்டுள்ளார். இதனை அடுத்து மோகன்ராஜ் உடனடியாக அந்த அறைக்குள் சென்று பார்த்த போது ஒரு நபர் அங்கிருந்த செல்போன்களை திருட முயற்சிப்பதை கண்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ், என்ன செய்வது என்று தெரியாமல் திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டுள்ளார், உடனே திருட வந்த நபர் பதட்டத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக சிலாப்பிள் அடிப்பட்டு பின்னர் மரக்கிளையில் பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: இது என்னடா புது டெக்னிக்கா இருக்கு..உறவினர் போல வீடு புகுந்த பர்தா கொள்ளையர்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் சைதாப்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த மரணம் தொடர்பாக நடத்திய விசாரணையில், இறந்த நபர் சைதாப்பேட்டை கோதாமேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31) என்பதும், ஏற்கனவே இவர் மீது பல காவல் நிலையங்களில் திருட்டு, கஞ்சா உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் கைவரிசையில் ஈடுபடும்போது எதிர்பாராதவிதமாக அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குப்பை கிடங்கு எதிர்ப்பு நடைபயணம்: போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு... நடந்தது என்ன?