சென்னை: திருவல்லிக்கேணி முக்தருனிசா பேகம் தெருவில் வசித்து வந்தவர் சாகுல் ஹமீது (41). கடந்த மாதம் 24ஆம் தேதி சாகுல் ஹமீது அதிகாலை ஓவிஎம் தெருவில் அமைந்துள்ள நண்பரின் ஏவி.எம் விடுதிக்கு வந்துவிட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு ஒரு லட்சம் பணம், 69 கிராம் தங்க கட்டியுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் சாகுல் ஹமீதை கத்தியால் வெட்டிவிட்டு அவர் வைத்திருந்த பணம், தங்க கட்டி, 20 ஆயிரம் மதிப்புடைய செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினர். அந்த கும்பல் வெட்டியதால் முதுகு, இடது கால் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் சாகுல் ஹமீது ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் திருவல்லிகேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (21), சௌக்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (24), போஸ்கோ (24), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சாமியா ஹுமாயூன் (32) மற்றும் ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த ராம் குமார் (25) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் சாகுல் ஹமீது தான் தங்களை வைத்து வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியதாக வாக்குமூலம் கொடுத்தனர். இதனைக் கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சாகுல் ஹமீது குருவியாக செயல்பட்டு வந்ததும், கரோனா காலத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையை சமாளிக்க வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.
மேலும், நாடகமாடி கொள்ளையடிக்கப்பட்ட பணம், தங்கத்தை தனது நண்பரின் லாட்ஜில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாட்ஜில் மறைத்து வைத்திருந்த பணம், தங்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாகுல் ஹமீது திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குருவியாக செயல்பட்டு வந்த சாகுல் ஹமீதின் தலைவனுக்கு அவர் நடத்திய வழிப்பறி நாடகம் தெரியவந்ததால், அந்த தலைவன் சாகுல் ஹமீதை தொடர்புகொண்டு மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட பயத்தில் சாகுல் ஹமீது தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. எனினும் காவல் துறையினர் விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை இளம்பெண் கடத்தல் விவகாரம் - மேலும் நான்கு பேர் கைது!