உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தை உலக நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அண்மையில், சென்னையில் கரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்குமார் மற்றும் பெருங்குடியைச் சேர்ந்த பார்மசிஸ்ட் வல்லுநர் சிவநேசன் (47) ஆகியோர் இணைந்து ஜி.என். செட்டி தெருவில் அமைந்துள்ள ராஜ்குமார் வீட்டில் உள்ள ஆய்வகத்தில் பணி செய்து வந்துள்ளனர்.
மருத்துவர் ராஜ்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் பகுதியில் சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் தலைமை அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
மேற்கூறிய இருவரும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை ஆராய்ச்சி செய்து, அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் மிகப்புகழ்பெற்ற இருமல் மருந்தான 'நிவாரண் 90' என்ற இருமல் மருந்தையும்; இந்தக் கம்பெனிதான் கண்டுபிடித்து விற்பனை செய்து வருகிறது. இதேபோன்று நினைவாற்றலைப் பெறுவதற்காக 'மெமரி பிளஸ்' எனும் மருந்து மாத்திரைகளை ஆய்வு செய்து அதையும் விற்பனை செய்து வருகின்றனர். இதேபோன்று 'வெல்வெட்டி' என்ற பெயரில் இயற்கை மருந்துகள் நிறைந்த தலைக்குப் போட்டு குளிக்கும் ஷாம்புவை கண்டுபிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தில் கடந்த 27 ஆண்டுகளாக தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர் சிவநேசன். இருவரும் சேர்ந்து தான் பல்வேறு மருந்துகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் இருவரும் சேர்ந்து, தற்போது கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த ரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கினால், நோய் அழிய வாய்ப்புள்ளதாகக் கூறி சோடியம் நைட்ரேட் மூலம் மாத்திரையை தயாரித்து, நேற்று வீட்டிலேயே இருவரும் ஆய்வுக்காக மாத்திரையை உட்கொண்டனர்.
ஆனால், மாத்திரை விஷமாக மாறியதால், உடனே இருவரும் மயக்கமடைந்தனர். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர், உடனே இருவரையும் சிகிச்சைக்காக தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சிவநேசன் நேற்றிரவு (மே.7)சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், மருத்துவர் ராஜ்குமார் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து சிவநேசனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ராஜ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ராஜ்குமாரின் ஆய்வகக் கூடத்திற்குச் சென்று, அந்த மாத்திரைகளைக் கைப்பற்றி தடயவியல் துறைக்கும், மருத்துவச் சோதனைக்கும் அனுப்பியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபத்திற்குள்ளான இந்திய விமானப்படை விமானம்