இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். இரவீந்திரநாத் கூறியுள்ளதாவது, "சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றிவந்த முதுநிலை மருத்துவ அறுவை சிகிச்சைப் பிரிவு மாணவர் லோகேஷ் குமார், கரோனா பணிக்குப் பின்பு தனிமைப்படுத்தலில் இருந்தார்.
அவர் திடீரென்று சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மரணம் அடைந்த லோகேஷுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இறப்புக் குறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் அரசு வழங்கிட வேண்டும்.
ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கரோனா வார்டில் ஆறு மணி நேரம் மட்டுமே பணி நேரம் வழங்கப்படுகிறது. ஆனால், சென்னை மருத்துவக் கல்லூரியோடு இணைந்த பல மருத்துவமனைகளிலும், பல மருத்துக் கல்லூரிகளிலும், இந்தப் பணி 12 மணி நேரத்திற்கு மேல் வழங்கப்படுகிறது. இது கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
கரோனா தொற்றுக்கு உள்ளான பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கிட வேண்டும். அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். அவர்களுக்கான பயிற்சிக் கால ஊதியத்தை உயர்த்திட வேண்டும். கரோனா காலக்கட்டத்தில் இறந்த அனைத்து பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்" எனக் கூறினார்.