சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் தற்போதுவரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும் லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார். மேலும் அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குபடுத்தி மீன் சந்தைக்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மெரினா கடற்கரை வணிக தளம் அல்ல என தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை மக்களுக்கானது என்று கூறினர். மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றுவதற்காக, மாநகராட்சிக்கு நடவடிக்கை எடுக்க முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேபோல, கடற்கரை சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள கடைகள் கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் இருப்பதால் அவற்றை கடற்கரை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டும் என்றும் லூப் சாலையில் மீன் சந்தை கட்டும்போது அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணிகளைத் தொடங்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
விதிமீறுபவர்களைத் தேவைப்பட்டால் கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்று தெரிவித்த அவர்கள், கடற்கரையிலுள்ள உணவுக் கடைகள், உணவுப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் அவற்றை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இது குறித்தும் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ‘அரசின் பொறுப்பற்ற செயலால் 17 உயிர்கள் பலியாகியுள்ளன’ - சீமான்