சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு (ஏப்ரல் 14)அவரது மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, இந்து மக்கள் கட்சியின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்காததை அடுத்து, இந்து மக்கள் கட்சி நிர்வாகி அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “வரும் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், அதற்காக அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவுக்கு காவல்துறை இன்னும் பதிலளிக்கவில்லை. எனவே, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த அனுமதிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, “இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த காலங்களில் மாலை அணிவிக்கச் சென்றபோது, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ச்சியாகச் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் செயல்படுவதால், அப்போதைய சூழலைப் பொறுத்து மனு பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சி தரப்பு வழக்கறிஞர், “நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், மரியாதை செலுத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை (ஏப்ரல் 12) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சிபிஐ, திரிணாமுல், என்சிபி தேசிய கட்சி அந்தஸ்து இழப்பு.. ஆம் ஆத்மிக்கு கிடைத்த அங்கீகாரம்!