சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக, கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலரான எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதன்பின் இரவு நேரம் போக்குவரத்திற்குத் தடை விதித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் 2019ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடை உத்தரவால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்பவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.பி.எல்.சுந்தரமும், ஈரோட்டைச்சேர்ந்த கண்ணையன் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 சக்கரங்களுக்கும் மேல் உள்ள வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி இல்லை என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மாற்றியமைக்கக்கோரி சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மாற்றுப்பாதையில் தூரம் அதிகம்: அப்போது, கோவை முதல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே பிறப்பித்த இரு அறிவிப்பாணைகளில் எந்த எடையும் குறிப்பிடப்படவில்லை எனவும், பதிவுச்சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள எடைக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்செல்லக்கூடாது என்று மட்டுமே உத்தரவிட்டுள்ளதால், உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 400 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பயணிக்க வேண்டும் எனவும், இந்த சாலை வழியாக செல்வதாக இருந்தால் 130 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணித்தால் போதுமானது எனவும் வாதிடப்பட்டது.
கூடுதலாக தொகையைப் பெற்றுக்கொள்ளலாமே? கூடுதல் தூரம் பயணிப்பதாக இருந்தால் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் எனவும்; இந்த கட்டுப்பாடுகளால் லாரி உரிமையாளர்களுக்கு என்ன பாதிப்பு உள்ளது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நமது தேவையைப் பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் செயல்படுகிறோம் என வேதனை தெரிவித்தனர்.
தேனி மேகமலை - ஸ்விட்சர்லாந்து போன்றது என்ற நீதிபதிகள்: மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நீர்நிலைகள், வனங்கள் நிறைந்த தமிழ்நாட்டின் பெருமையைப் பலி கொடுக்க முடியாது எனவும், தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை ஸ்விட்சர்லாந்து போல அழகானது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் ராகுல் காந்தி