சென்னை: லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், தி லெஜண்ட். இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மொசலோ மொசலு’ பாடல் 14 மில்லியன் பார்வைகளையும் மற்றும் ‘வாடிவாசல்’ பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் யூடியூபில் கடந்துள்ளது.
மேலும் இப்படத்தின் டிரைலர் இதுவரை 29 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. எமோஷன், ஆக்சன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ள இப்படத்தை, கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி.என்.அன்புச்செழியன் தமிழ்நாடு முழுவதும் வெளியிடவுள்ளார்.
இது குறித்து ஜி.என்.அன்புச்செழியன் கூறுகையில், "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார். இப்படம் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு எங்கும் 800 க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து நடிகர் லெஜண்ட் சரவணன், “ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் எனக்கு ஒரு முக்கியமான படம்” எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா!