சென்னை: குர்திஸ் தலைவர் அப்துல்லா ஓசலானின் விடுதலை குறித்தும், துருக்கியில் பல ஆண்டுகளாக நீடிக்கும், குர்திஸ் மோதலுக்குத் தீர்வை குறித்து, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (அக்.12) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், பேராசிரியர் சரஸ்வதி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முதலில் பேசிய பேராசிரியர் சரஸ்வதி கூறியதாவது,"அப்துல்லா ஓசலான் ஒரு குர்திஸ் அரசியல் தலைவர் ஆவார். உலகளவில் பல லட்சக்கணக்கான குர்துகள் அவரை தங்கள் அரசியல் பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். பிப்ரவரி 1999-ல், அவர் சர்வதேச உளவுத்துறை நடவடிக்கையில் கடத்தப்பட்டு துருக்கிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்றிலிருந்து 24 ஆண்டுகாலமாக, அவர் சிறையிலிருந்து வருகிறார். பல ஆண்டுகளாக வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாதபடி, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதோடு இழிவாகவும் நடத்தப்படுகிறார்.
இருந்தபோதிலும், ஒசலான் கட்டமைத்த இயக்கம் மற்றும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான குர்திஸ் போராட்டங்கள் மற்றும் மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கான பலதேசிய, பலசமய இயக்கங்களில் முன்னணியில் உள்ளனர். அவரது கோட்பாடுகள் சுயநிர்ணய உரிமைக்காகவும், பெண்களின் விடுதலைக்காகவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து வகையான சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் போராடுபவர்களை ஊக்குவிக்கின்றன. மேலும், எங்கு எங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கு எல்லாம், மக்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், இது ஒரு இனத்தின் பிரச்சனை இல்லை; உரிமைக்கான போராட்டம் என்று தெரிவித்தார்."
இதைத்தொடர்ந்து பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, "குர்திஸ் தலைவர் அப்துல்லா ஓசலானின் விடுதலை என்பது, முக்கியமாக பார்க்கப்படுகிறது. அவர், சிறையிலிருந்தே பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், எப்படி, நெல்சன் மண்டேலாவிற்கு உலக முழுவதும் அவரின் விடுதலை குறித்த ஆதரவையும், உலகத்தில் பல நாடுகளில் அவரது விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ளது. அதுபோல், துருக்கி சிறையில் இருக்கும் ஓசலானிற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக, அப்துல்லா ஓசலானை அவரது குடும்பத்தாரே சந்திக்காத நிலை உள்ளது. மேலும் வழக்கறிஞரும் சந்தித்தவில்லை. துருக்கியில் பல ஆண்டுகளாக, நீடிக்கும் குர்திஸ் மோதலுக்கு நியாயமான மற்றும் ஜனநாயக அரசியல் தீர்வைக் கொண்டு வர அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூட்டிய கேட்டில் ஏறி குதித்த அகிலேஷ் யாதவ்.. வைரலாகும் வீடியோ!