அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தீர்க்கப்படும்- அமைச்சர் மா. சுப்பிரமணியம் - ஊதிய உயர்வு பிரச்னை தீர்க்கப்படும்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் விரைவில் பேசித் தீர்க்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை ராஜிவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களைச் சந்தித்து உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், உறுதுணையாக இருப்போம் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்கள் வலியுறுத்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு குறித்து நடவடிக்கை
இது குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், “ஏற்கனவே மருத்துவர்கள் போராட்டதில் மருத்துவர்களுக்காக ஆதரவு தெரிவித்திருக்கிறோம். எந்த வகையில் அரசாங்க ஆணை அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக இதற்கு தீர்வு காணப்படும்.
30 ஆயிரம் பணியாளர்கள் என்கிற வகையில் ஒப்பந்த அடிப்படையில் அவுட் சோர்சிங் முறையில் பணியாற்றுபவர்களுக்கு 15 ஆண்டுகளாக எந்தவித தீர்வும் காணப்படவில்லை. அப்படியேதான் நிரந்தரப்படுத்தப்படாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை இரண்டொரு நாள்களில் தீர்க்கக்கூடியவையல்ல. பேரிடரில் ஊரடங்கு காலம் முடிவுக்கு வந்தபிறகு ஒவ்வொரு துறை வாரியாக உயரலுவலர்களுடன் அந்தந்த சங்க நிர்வாகிகளையெல்லாம் அழைத்து பேசி யாரையெல்லாம் பணி நிரந்தரம் செய்ய முடியுமோ அதை செய்வோம்” எனத் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம்
இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறும்போது, “தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. முந்தைய ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காக போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டோம். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.
இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட தமிழ்நாட்டிலுள்ள மருத்துவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
மருத்துவர்களின் உணர்வு
ஒவ்வொரு மருத்துவரும் கடந்த 10 வருடங்களாக மாதம் தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ருபாய் வருமான இழப்புடன், கனத்த இதயத்துடன் பணி செய்து வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கரோனா சமயத்தில் மருத்துவர்களின் உணர்வுகளை முதலமைச்சர் புரிந்து கொள்வார் என நம்புகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கையை முதலமைச்சர் ஆதரித்து வந்துள்ளார்கள். மேலும் அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354இன் படி ஊதியம் வழங்கப்படும் என்று, ராஜிவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த மருத்துவர்களிடம் முதலமைச்சர் நேரில் கூறியதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்
மேலும், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான PB4 @12yrs ஐ முழுமையாக நிறைவேற்றி, ஊதியப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354இன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட முதலமைச்சரை வேண்டுகிறோம்” என்றார்.
கரோனா பேரிடர் போரில் உயிர் நீத்த ஏழு அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் ரூ.50 லட்சம் வழங்கி, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5ஆவது நாளாக தொடரும் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் கடும் அவதி