தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்த நாளான இன்று சென்னை வேப்பேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மலர் அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பெரியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், 'சாதி-மத ஒழிப்பு, சமூக நீதிக்காக போராடுவதுதான் தந்தை பெரியாருக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதை என்றார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக ஒரே மொழி எனக்கூறி இந்தியை திணிப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சியையும், ஒரே கலாசாரம் எனக்கூறி இந்துத்துவாவை திணிப்பதற்கு எடுக்கும் முயற்சியையும் எதிர்த்துப் போராடுவதற்கு சபதம் ஏற்பதுதான் பெரியாருக்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது எட்டாம் வகுப்பு வரை தேர்வு கூடாதென அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அப்பொழுது 5 மற்றும் எட்டாம் வகுப்பிற்கு தேர்வு என அறிவித்த பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் அந்த தேர்ச்சியில் மாநில அரசு விரும்பினால் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என மாநில அரசிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தமிழக அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது எட்டாம் வகுப்புத் தேர்வில் பொதுத்தேர்வுக் கூடாது என்று அந்த சட்டத்தின் முக்கியமான பிரிவு இருக்கும்போது, இதனை சீர்குலைக்க மத்திய அரசைவிட மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உலகிலேயே சிறந்த கல்விமுறை இருக்கக்கூடிய பின்லாந்து நாட்டிற்குச் சென்று அங்குள்ள கல்வி முறையை ஆய்வு செய்து வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என அறிவித்தது மிகவும் பிற்போக்குத் தனமானது என்று சாடினார்.