கரோனா பெருந்தொற்று பிரச்னைக்கிடையில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க அரசியல் களத்தில் இறங்கின. அசாம், மேற்கு வங்கம் இரண்டையும் கைப்பற்ற பாஜக முயன்றபோது, இடதுசாரிகள் கேரளாவைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினர். இந்த முறை நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன.
நாடு முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் பாஜக போட்டியிட்டது. புதுச்சேரியில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக போட்டியிட்டது. ஆனால் எப்போதும்போல, கருத்துக் கணிப்பாளர்கள் வாக்காளர்களின் உண்மையான நாடித் துடிப்பைக் கண்டறிய தவறிவிட்டனர் என்பது தெளிவானது.
1975ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது மகன் மு.க.ஸ்டாலினின் தோள்களைத் தட்டிக் கொடுத்து, "இந்திரா காந்தி உங்களை ஒரு பெரிய தலைவராக்க விரும்புகிறார். கஷ்டங்களை எதிர்கொள்ளத் தொடங்குங்கள்" என்று கூறினார். அதன்படி மு.க.ஸ்டாலின் பல கஷ்டங்களை எதிர்கொண்டார். ஆனால் 'நமக்கு நாமே' என்ற பெயரில், தமிழ்நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட பயணம் தற்போதைய தேர்தலில் நல்ல பலனைத் தந்துள்ளது. தமிழ்நாட்டின் வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவாக 37 விழுக்காடு வாக்குகளை அளித்து நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். வாக்காளர்கள் அதிமுகவை முழுவதுமாக வீழ்த்திவிடவில்லை. அக்கட்சிக்கு 33 விழுக்காடு வாக்குகளுடன் 77 இடங்களை அவர்கள் வழங்கியுள்ளனர்.
கரோனா தாக்கத்திலிருந்து கேரள மக்களை பாதுகாக்க, பினராயி விஜயன் நன்கு திட்டமிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேரள மக்கள் அவருக்கு அமோக வெற்றியை வழங்கினர். கடந்த தேர்தலில் பாஜக ஒரேயொரு இடத்தைக் கைப்பற்றி கேரள சட்டப்பேரவையில் தனது கணக்கை தொடங்கி வைத்திருந்தது. ஆனால் இந்த முறை பாஜக ஒரு இடத்தைக்கூடப் பெற முடியவில்லை. கேரளாவின் தீர்ப்பு பல விஷயங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் பத்து ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று பாஜக தனது முழு சக்தியையும் பயன்படுத்தியதால், மேற்கு வங்கத் தேர்தல் களம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. இந்த முறை தேர்தலை சந்தித்த ஐந்து சட்டப்பேரவைகளில் மேற்கு வங்கம் மிகப்பெரியது. சட்டப்பேரவைத் தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்துவதற்கான முடிவு, வாக்குப்பதிவு முகவர்கள் நியமனங்கள் குறித்த விதிகளை தளர்த்துவது, சிஆர்பிஎஃப்-ஐ கடுமையாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்துடன் போராட வேண்டியிருந்தது. மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வெல்லும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். ஆனாலும், வங்கத்தின் வாக்காளர்கள் மம்தாவை வெகுவாக ஆதரித்து, கடந்த தேர்தலில் அவர் வென்ற 211 இடங்களை விட அதிகமாக அவருக்கு வழங்கியுள்ளனர்.
2016 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 10.2 விழுக்காடு பெற்று பாஜக மூன்று இடங்களில் வென்றது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் பாஜக வென்றது. இதனால் இந்தத் தேர்தலில் 121 இடங்களை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று அக்கட்சி வலுவாக நம்பியது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பலரையும் தன்பக்கம் இழுத்தது. இடதுசாரிக் கட்சிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் இந்த முறை பாஜகவுக்கு ஆதரவாக நின்றனர். பாஜகவின் முழு வலிமையுடன் நடத்தப்பட்ட உச்சபட்ச பரப்புரையால், மேற்கு வங்க தேர்தல் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி 32 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் அவர்கள் இருவரும் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை. மேற்கு வங்கத்துக்கான போரில், வாக்காளர்கள் மற்றக் கட்சிகளை உதறித் தள்ளியதால், திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் மட்டுமே களத்தில் இருந்தன. இறுதியாக திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில், அசாமில் பாஜக வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றது. இந்த முறையும் கட்சி மிகவும் சிரமமின்றி மாநிலத்தை வென்றது. ஏ.ஐ.யு.டி.எஃப் உடன் இணைவதன் மூலம் 34 விழுக்காடு முஸ்லீம் வாக்குகளைப் பெறலாம் என்று காங்கிரஸ் நம்பியது. ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் 75 இடங்களை வென்றது. அசாமின் வாக்காளர்கள், மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளின் அடிப்படையில் வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் - உதயநிதி சந்திப்பு: உறவை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு