சென்னை: சின்னத்திரை நடிகர் அர்ணவ், நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் அர்ணவ் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் கொடுத்ததை அடுத்து போரூர் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ணவ் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், தனக்கு மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக பொய் குற்றச்சாட்டு கூறி மனைவி திவ்யா, அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாகக் கூறியுள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது பொய் என்றும், அவர் தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
திவ்யா துன்புறுத்தியது குறித்து தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனக்கு எதிராக திவ்யா அளித்த புகார் மீது மட்டும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, திவ்யாவின் உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதற்கான மருத்துவ ஆவணங்களைத் தாக்கல் செய்தார். பின்னர் அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், அது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்பதாலும், தற்போதைய நிலையில் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தண்ணீர் நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல: ராதாரவி சரவெடி!