சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி, விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு நிலுவையில் உள்ள நிலையில், மனைவி தனது குழந்தையுடன் ஓசூரில் உள்ள பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
சுதந்திரமான வருமானம் இல்லாததால் ஓசூரில் இருந்து விவாகரத்து வழக்கிற்காக சேலம் வந்து செல்வது சிரமம் எனக் கூறி, தனது விவாகரத்து வழக்கை ஓசூருக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி, வழக்கை ஓசூருக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும், ஜீவனாம்சம் கோரிய மனுக்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நீண்ட காலம் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தம்பதியர் இடையிலான பிரச்சனை காரணமாக குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
குழந்தையின் தாய் வேலையில்லாமல் இருந்தால், அவரது அந்தஸ்து, வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், தாமாக முன் வந்து இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவிடலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இடைக்கால ஜீவனாம்சம் வழங்கும்படி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கத் தவறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சமூக ஆர்வலர் காசிமாயனிடம் வம்பு.. வழக்கில் சிக்கிய ரவுடி போலீஸ்!