சென்னை: பல்கலைக்கழகம் தனது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் உரிமைகூட இல்லாத நிலை தமிழ்நாட்டில் எற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் மாளிகை, பல்கலைக்கழகங்களில் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது எற்புடையது அன்று, என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக்கழகங்கள் உரிய சட்டங்கள், விதிகளின்படி சுதந்திரமாக தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தகுந்த வழிகாட்டுதலை, தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை பல்கலைக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும்" என கூறிய பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களை மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்யும் மேடைகளாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளது.
விவாதத்திற்கு உரிய ஒரு கருத்தை ஒருவர் முன் வைத்தால் அதை மறுத்துப் பேச மற்றவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். பட்டமளிப்பு விழாவை அத்தகைய விவாதத்திற்கு உரிய அரங்கமாக மாற்றக் கூடாது. மேலும் பல்வேறு சிக்கல்களைக் கடந்து மாணவர்களின் உழைப்பிற்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான் பட்டமளிப்பு விழா. அத்தகைய பட்டமளிப்பு விழா உரைகள், உற்சாகத்துடன் சமூகத்தை மேம்படுத்த தங்கள் அறிவைப் பயன்படுத்திட மாணவர்களை ஊக்கபப்படுத்த வேண்டும் என அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.
அண்ணாமலைப்பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் அண்ணா பேசும் போது "சிலந்திவலை போல் சமூகத்தில் விரிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற உங்களுக்குத் தரப்பட்ட உரிமம் தான் இந்தப் பட்டம்" என்று கூறினார். சாதி, சடங்கு உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் சமூகம் சிக்கித் தவிக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற தாங்கள் பெற்ற பட்டத்தைப் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அண்ணா அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு மிக்க உரைகள் அமைய வேண்டிய பட்டமளிப்பு விழாக்களைத் தமிழ்நாடு ஆளுநர் தனது சர்ச்சைக்குரிய உரைகள் மூலம் களங்கப்படுத்தக்கூடாது. மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துக்களைப் பேசி, மாநில அரசுக்கு எதிரான மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க முயல்வது நியாயமற்ற, நேர்மையற்ற அணுகுமுறை".
மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம், ஆளுநர் மாளிகை சொல்வதைத் தான் செய்யமுடியும் என்று தெரிவித்ததாக உயிர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை மேயர் ப்ரியா படத்தை வாட்ஸ் அப்பில் டிபி-யாக வைத்து மோசடி