சென்னை: “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.22,252 கோடி முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்திருக்கிறது. 14 ஆவது இடத்தில் இருந்து, இன்றைக்கு தமிழ்நாடு 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இது, இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய நற்சான்றிதழாக அமைந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலய சாதனையை அடைந்திருக்கிறோம். இதற்கு முழுமுதல் காரணமாக அமைந்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இதுவரை மாநாடுகள்: கடந்த காலத்தில் மிக மிகத் தொய்வாக இருந்த இந்தத் துறையை மீட்டெடுப்பதற்கு, ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளைத் துணிச்சலாக செய்யக் கூடிய தங்கம் தென்னரசு இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்து அவர் பெயரை நான் ‘டிக்’செய்தேன்.
![தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசினுடைய இலக்கு- முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15733157_mks.jpg)
என்னுடைய தேர்வு சரியாக இருந்தது என்பதை நித்தமும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் தொழில்துறையை தங்கமாக மாற்றி வரும் தங்கம் தென்னரசை மனதாரப் பாராட்டுகிறேன். நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம்.
சென்னையில் இரண்டு மாநாடுகள் நடந்திருக்கிறது. கோவையில் ஒரு மாநாடும் - தூத்துக்குடியில் ஒரு மாநாடும் - துபாயில் ஒரு மாநாடும் நடந்துள்ளது. இந்த மாநாடு, ஆறாவது மாநாடாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஓராண்டு காலத்திற்குள் ஆறு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதே ஒரு மிகப்பெரிய சாதனை. அனைவருக்குமான வளர்ச்சி – அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி – அமைதி, நல்லிணக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ மாநிலத்தை நோக்கி இந்தியத் தொழிலதிபர்கள் - உலக நிறுவனங்கள் வரத் தொடங்கியதன் அடையாளமாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு இலக்குகள்: இன்று இந்த மாநாட்டில், நிதி நுட்பங்களுக்கான தொழில் திட்டங்களுக்காக சிறப்பு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். 10 நாட்களுக்கு முன்புதான், மேம்பட்ட உற்பத்தி (Advanced Manufacturing) தொடர்பான ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தினோம். இந்த முதலீட்டு மாநாடுகளுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மூன்றாவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட (Made in Tamil Nadu) பொருட்கள் சென்றடைய வேண்டும்.
நான்காவதாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்துத் தொழில் முயற்சிகளும் இந்த நான்கு இலக்குகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
இவை அனைத்தும் அனைத்து நிறுவனங்களது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதன் அடையாளம்தான் தமிழ்நாட்டை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவது. தமிழ்நாடு அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து, தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் இன்றைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசின் கடமை: உங்கள் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனுமதிகளையும் பெறுவதற்கும், உங்கள் தொழில் சிறந்திடவும் உறுதுணையாக இருப்போம். இன்றைய மாநாட்டின் சிறப்பம்சமாக, நிதிநுட்பத் துறைக்காக பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மின்ணனுமயமாக்கப்பட்ட நிதிச் சேவைகள் அனைத்தும், ஏழை, எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
ஆன்லைன் விற்பனைகள் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. மின்னணு மயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாமும் வளர்ந்திட வேண்டியதை அரசின் கடமையாக கருதுகிறேன்.
வளர்ந்து வரும் நிதிச் சேவைகள், துறையின் ஆதரவுடன், உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பத் துறையை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. இதற்காகவே “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021” அறிக்கையை கோயம்புத்தூரில் நான் வெளியிட்டேன். தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
டி.என்-டெக்ஸ்பீரியன்ஸ் (TN-Tecxperience) திட்டத்திற்கான இணையதளத்தினையும் இன்று துவக்கி வைத்திருக்கிறேன். இந்தத் திட்டம் மூலம் தொழில்நுட்பச் சேவைகள், ஒரே குடையின் கீழ் அளிக்கப்படும். இதற்கான இளைய அறிவுசக்தி உருவாக்கப்பட்டு வருகிறது. என்னுடைய கனவுத் திட்டமாக இருக்கக்கூடிய ‘நான் முதல்வன்’ திட்டம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
முதலீட்டு களவிழா: இந்தத் திட்டத்தின் குறிக்கோள்களை அடைந்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு, இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து, நிதிநுட்ப அறிவுச் சூழல் அமைப்பை உருவாக்க, தொழில் மற்றும் கல்வித் துறைகளுடன் இணைந்து பணியாற்றும். தொழில் மற்றும் கல்வித்துறைகள் இணைந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் கூட்டாக இந்த முன்முயற்சி செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) சென்னையில் குறைந்தபட்சம் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்ட ஒரு நிதி நுட்ப நகரத்தை படிப்படியாக உருவாக்க இருக்கிறது. இதன் மூலம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான நிதி சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளின் மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும்.
தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PitchFest) இன்று துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்குத் தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசினுடைய இலக்கு. நிதிநுட்பத் தொழில்களை மதிநுட்பத்துடன் நம் மாநிலத்திற்கு ஈர்க்க நினைக்கிறோம். அதன் முதற்கட்டத்திலேயே வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
இது வெறும் தொடக்கம்தான். உங்கள் நிதிநுட்பத் தீர்வைகள் மூலம், இந்த மாநிலத்தினை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கு உங்கள் ஆதரவை இந்த நேரத்தில் நான் வேண்டுகிறேன்” என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உல்லாசமாக இருந்த காதலன்...கழற்றிவிட முயன்றபோது கைது!