சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், தச்சு வேலை செய்து வரும் இவருக்கு, 17 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். துரைராஜின் மனைவி கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் சிறுமியை துரைராஜ் தனியாக வளர்த்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக சிறுமியை பார்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் துரைராஜ், சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதனிடையே சிறுமி 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாத நிலையில் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அண்மையில் ஆண் போல நடை, உடையுடன் காட்சியளிக்கும் பெண் தோழியுடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியினால் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சிறுமிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு உள்ளார். தனியார் காப்பகம் நடத்தி வரும் கார்த்திகேயன் என்பவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் சிறுமி கடந்த 30ஆம் தேதி தனது செல்போன் உள்ளிட்ட உடமைகளை மருத்துவமனையில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பதட்டம் அடைந்த காப்பக உரிமையாளர் கார்த்திகேயன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெண் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். சிறுமி விட்டு சென்ற செல்போனை ஆய்வு செய்த காவல் ஆய்வாளர், சிறுமி அதிகளவில் இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை கண்டுபிடித்து அவரது நட்பு பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களையும் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டார்.
இறுதியில் இன்று (அக்.2) அதிகாலை சிறுமி என்னூரில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்த காவல் ஆய்வாளர் அங்கு சென்று சிறுமியை மீட்டார். இதனையடுத்து புகார் அளித்த கார்த்திகேயனிடம் சிறுமியை ஒப்படைத்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை வரவழைத்து காப்பகத்தில் சேர்க்க வேண்டாம் நீங்களே பார்த்துக் கொள்ளுமாறு சிறுமியின் தந்தைக்கும் அறிவுரை வழங்கினார்.
மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல உழைக்கும் தந்தை துரைராஜ் ஒரு கட்டத்திற்கு மேல் மகளை கவனித்துக் கொள்ள முடியாமல் போனதை காவல்துறையிடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தந்தை கவனிப்பும் இல்லாமல் தாய் அரவணைப்பும் இல்லாமல் சிறுமி இன்ஸ்டாகிராமில் நேரம் செலவழித்து அதன் மூலம் 30,000 மேற்பட்ட பின் தொடர்பாளர்களை பெற்றதும் அதன் மூலம் கிடைத்த பல நண்பர்களுடன் சேர்ந்து தனது விருப்பப்படி நேரத்தை செலவழித்ததும் இதுபோன்ற முடிவுகளுக்கு காரணம் என்று சிறுமி தெரிவித்துள்ளார். இதே போன்று தொடர்ந்து நடைபெற்றால் வேறு ஏதும் தீய பழக்கங்களுக்கு சிறுமி அடிமையாகி விட கூடும் ஆகவே கவனமாக பார்த்துக் கொள்ளும் படியும் தந்தைக்கும், சிறுமிக்கும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:கொகைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நைஜீரியப்பெண் கைது