சென்னை: குன்றத்தூர் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரகாஷ்(25). இவர் மீது கொலை வழக்கு உள்ள நிலையில், தனது மகனை (பிரகாஷ்) காணவில்லை என அவரது பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, பிரகாஷை அழைத்துச் சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் உடலை வீசி விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த கருத்து உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த மறைமலைநகர் காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது “திருமுடிவாக்கம் பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் மாமுல் வாங்குவதில் பிரகாஷுக்கும் கருத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கஞ்சா போதைக்கு அடிமையான பிரகாஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கருத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட கருத்து மற்றும் அவரது கூட்டாளிகள், மறைமலைநகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் சென்றபோது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரகாஷை தூக்கிச் சென்று மண்ணிவாக்கம் பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் பிரகாஷின் உடலை கோணிப்பையில் கட்டி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கிணற்றில் வீசப்பட்ட பிரகாஷின் உடலை, தாசில்தார் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினருடன் தற்போது தேடி வருகின்றனர். இந்த பாழடைந்த கிணற்றில் நீர் இருப்பதால், அதனை கழிவு நீர் வாகனம் வைத்து நீரை உறிஞ்சி அப்புறப்படுத்திவிட்டு பிரகாஷ் உடலை தேடும் பணியில் குன்றத்தூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தந்தை கைது