சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவக்கல்லூரியில் உள்ள இளநிலை கால்நடைப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 24 ந் தேதி துவங்கி நடைபெறும் என தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப். 24ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கும், 25ஆம் தேதி இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பிடெக் படிப்புகளில் உள்ள சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், கால்நடை மருத்துவப்படிப்பில் தொழில்பிரிவினருக்கான கலந்தாய்வும் நேரடியாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் பிப். 28ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பிடெக்) (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவைக்கான மாணவர் சேர்க்கைக்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் அக்டோபர் 8 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணபித்த மாணவர்களின் விவரம்
தகுதிபெற்றவர்களின் பட்டியல் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (கலையியல் பிரிவு - BVSc AH (Academic)) பிரிவில் 22 ஆயிரத்து 240 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 21 ஆயிரத்து 899 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு பிரிவில் 248 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 245 பேர் தகுதிபெற்றுள்ளனர். பி.டெக். படிப்பில் 4 ஆயிரத்து 410 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 315 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்த 26 ஆயிரத்து 898 மாணவர்களில், 26 ஆயிரத்து 459 தகுதிபெற்றுள்ளனர். தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்டது.
கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு இடத்திற்கு 24ஆம் தேதி காலை 9 மணிக்கு பிவிஎஸ்சி & ஏஎச் மற்றும் பிடெக் கலையியல் பிரிவு பிரிவிற்கும், 25ஆம் தேதி காலை 9 மணிக்கு பிவிஎஸ்சி&ஏஎச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்) மற்றும் பிடெக் பிரிவில் சிறப்புப் பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகளுக்கும், காலை 11.30 மணிக்கு பிவிஎஸ்சி & ஏஎச் தொழிற்கல்விப் பிரிவிற்கும் நேரடியாகக் கலந்தாய்வு சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெறும்.
மேலும், பொதுப்பிரிவுக்கான பிவிஎஸ்சி&ஏஎச் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவுக்கான பிவிஎஸ்சி&ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் - கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மற்றும் பிடெக் பட்டப்படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வில் பதிவு செய்தல், கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பத்தைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றைப் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.
இவர்களுக்கான ஒதுக்கீட்டு உத்தரவுகள் மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, மார்ச் 16ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் அசல் சான்றிதழ்களை நேரடியாகச் சென்று அளித்துச் சேர வேண்டும். மேலும், விபரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in) வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி!