காலம் கடந்து நிற்கும் காவியம்:
கலாசார மாற்றம், பொருளாதார மாற்றம் என உலகம் வேறொரு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, 'ராமாயணம்' என்னும் மகா காவியம் வாழ்வியலின் அங்கமாக இன்றும் காலம்கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காவியத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்களின் வடிவமைப்புகள், வால்மீகியின் உரைநடை இன்றும் அக்காவியத்தை தூக்கிப்பிடிக்கின்றன.
கைகேயியின் முக்கியத்துவம்:
இந்த இதிகாச காவியத்தில் 'கைகேயி' என்னும் கதாபாத்திரத்தை பேருந்தில் நமதருகே உள்ள இருக்கையில் சிறிதுநேரம் அமர்ந்து கடந்துபோகும் மனிதர்களில் ஒருவரைப்போல் ஒதுக்கிவிட முடியாது. அவரின் ஒருபக்கத்தை அறிந்துகொண்ட நாம் மறுபக்கத்தை பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாருங்கள் அந்தக் கதையை உங்கள் கண்முன் நிகழ்த்துகிறோம்.
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, காலத்தின் கட்டாயத்தால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பதினான்கு ஆண்டுகள் மனத்துயரை அடைந்து கண்ணீரால் கரைந்தவள் கைகேயி.
ராமாயண கதாபாத்திரங்களிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கைகேயிதான். தசரத மன்னனின் மூன்றாவது பட்டத்து அரசியான அவள் வீரமும் விவேகமும் பொருந்திய பேரழகி! தன்னுடைய அன்பாலும் பாசத்தாலும் தசரதனின் உள்ளத்தை கொள்ளைகொண்டதோடு மட்டுமல்ல, அனைவரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்தவள்.
இப்படிப்பட்ட கைகேயி ஏன் 'ராமனுக்குப் பதிலாக தன் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்' என்று எண்ணினாள். எப்படி '14 ஆண்டுகள் ராமனைக் காட்டுக்கு அனுப்பத் துணிந்தாள்' ஆகிய கேள்விகள் நம் மனதைப் பற்றிக் கொள்கின்றன. இந்த இரண்டு நிகழ்வுகள் கைகேயியை கொடியவளாக சித்திரிக்கும் ராமாயணத்தில் மறுபக்கத்தையும் காட்டியிருப்பர்.
ராமனின் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருந்தவளும், விவேகத்தின் மறு உருவமாக திகழ்ந்தவளுமான கைகேயி, மந்தரை என்னும் கூனியின் பேச்சைக்கேட்டு மனம் மாறி ராமனைக் காட்டுக்கு அனுப்ப துணிந்தாள் என்பது உண்மையானால், அவளின் கதாபாத்திரத்தின் மகத்துவம் அப்போதே அழிந்திருக்கும். ஆனால் உலகம் இந்தக் கண்ணோட்டத்தோடுதான் கைகேயியை உற்றுநோக்குகிறதா என்றால் ஆம்! என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஆனால் ராமாயணத்தை மேலோட்டமாகப் பார்க்காமல், ஊடுருவிப்பார்த்தால் கைகேயியின் மகத்துவம் பற்றி புரியும்.
கைகேயியின் வீரம்:
சம்பராசுரன் என்ற அரசனை எதிர்த்து தசரதன் போர் புரிந்தான். அப்போது, தசரதனின் தேர் சாரதியாக கைகேயி போர்க்களம் புகுந்தாள். போரின் நடுவே போர்க்களத்தில் தேரின் அச்சாணி முறிந்துபோனபோது, தன் விரலை தேருக்கு அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள் கைகேயி. அவளின் வீரத்தைக் கண்டு சிலிர்த்துப்போன தசரத சக்கரவர்த்தி, 'தன்னிடம் ஏதேனும் இரண்டு வரங்களைக் கேள், அதை உனக்குத் தருகிறேன்' என வாக்களித்தார். கைகேயி பேராசைக்காரியாக இருந்திருந்தால் 'நான் பட்டத்து ராணியாக வேண்டும்’, 'எனக்குப் பிறக்கும் குழந்தை நாட்டை ஆள வேண்டும்’ என்று அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை.
அப்போது அப்படிக் கூறியவள் எதற்காக மனதை உறையவைக்கக் கூடிய, வரலாற்றில் கறையாக பதியக்கூடிய, அந்தக் கொடிய வரங்களை காலம்கடந்து கேட்டாள்? என்ற மில்லியன் டாலர் கேள்விகள் நம்முள் எழுகின்றன. அதற்கான பதிலைக் கேட்டால் உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின் தியாகம் தெரியும்.
குறி தவறிய தசரதனின் அம்பு:
தசரத மன்னன் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது, குளத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக வந்த சிரவணன் மீது யானை என நினைத்து தவறாக அம்பு எய்திவிடுவார். பின்னர் அருகில் சென்று பார்த்தபோது, அது மனிதன் என்று தெரிந்தவுடன் மீளாத்துயரை அடைந்தார் தசரதன். உயிரிழக்கும் தருவாயில் அந்தச் சிறுவன், 'தாகத்தோடு எனது தாய் தந்தையர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தண்ணீரையும் எனது சடலத்தையும் அவர்களிடம் கொண்டு சேர்த்து விடுங்கள்' என தசரதனிடம் வேண்டினான்.
இதனால் மனமுடைந்துபோன தசரத மன்னன், அவனின் சடலத்தை எடுத்துக்கொண்டு பார்வையற்ற சிறுவனுடைய வயோதிக தாய்- தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறினார். மகனை இழந்த துயரத்தில் அந்தப் பெற்றோர், 'எங்களைப் போலவே புத்திரனைப் பிரிந்து, அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்’ என சாபமிட்டு இறந்தனர். சாபம் பற்றிய உண்மை அறிந்து கைகேயி மனம் உடைந்துபோனாள்.
கைகேயியின் தியாகம்:
தசரதனுக்கு அந்த முதியவர்கள் இட்ட சாபம் குறித்து, ஜோதிடர்களை அழைத்து வினவினாள். 'புத்திரனைப் பிரிந்து’ என்கிற சாபம் 'புத்திரன் இறந்து’ என்கிற அர்த்தத்தில் இடப்பட்டாலும், புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால், உயிர் பிழைத்துவிடுவான் என்று யோசனை கூறினர்.
ஆனால் புத்திரனின் பிரிவால் தந்தை மரணித்துவிடுவார் என்ற அதிர்ச்சிகர தகவலையும் அந்த ஜோதிடர்கள் கூறினர். மனைவியின் கடமையைவிட, தாய்மையின் அன்புக்கு, அவள் முக்கியத்துவம் கொடுக்கத் துணிந்தாள்.
ராமனை காப்பாற்ற தசரதனிடமிருந்து பிரிப்பதற்கு, சரியான காரணம் காட்ட வேண்டும் என்பதற்காக, இந்த உலகம் தன்னை நிந்தித்தாலும் பரவாயில்லை என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள். ஜோதிடப்படி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னன் உயிர் துறக்க நேரிடும் என்பதால், கணவனைக் காக்க, பரதனுக்கு முடிசூட்டத் துணிந்தாள். இதைக் காரணம்காட்டி ராமனை காட்டிற்கு அனுப்பினாள். தசரத மன்னனையும் ராமனையும் காப்பதற்கு தனது மகன் பரதன் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தாள்.
'உலகம் பழித்தது; பெற்ற மகன் பரதனே வெறுத்தொதிக்கினான்; ஆனால் கைகேயி செய்த தியாகம் ராமனுக்குத் தெரியும்! அது தேவர்களுக்கெல்லாம் புரியும்!' என்பது இதனை நம்பும் மக்களின் கருத்தாகும்.