சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி மற்றும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, விழுப்புரத்தில் உள்ள எம்.பி. கௌதம சிகாமணி வீடு உட்பட அவர்களுக்குத் தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் பாரன்சிக் ஆடிட் எனப்படும் தொழில்நுட்ப ரீதியிலான சோதனையில் லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களில் வழக்குக்குத் தேவையான ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா அல்லது அழிக்கப்பட்டுள்ளதா என கண்டறிந்து வருகின்றனர்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களில் பாரன்சிக் ஆடிட்டை மேற்கொள்ளும். இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள வரவு, செலவு ஆவணங்கள், ரசீதுகள், சொத்து ஆவணங்கள் முதலியவற்றை கண்டறிய பயன்படுகிறது.
அதுமட்டுமல்லாது வெளிநாட்டுப் பரிவர்த்தனைகள், முதலீடுகள், கிரிப்டோ கரன்சி முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என கண்டறியும், சோதனையும் நடைபெறுகிறது. மேலும், பல நிறுவனங்கள் சமீப காலமாக தனியாக மென்பொருள் ஒன்றை உருவாக்கி, அதில் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளும் போது கண்டுபிடிக்க முடியாத வகையில் பணி கணக்குகளை வைத்து வருகிறார்கள்.
கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து ஆவணங்கள் பரிவர்த்தனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ள ஏதேனும் தனி சாஃப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்ற அடிப்படையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கையில் பையுடன் வெளியே வந்த வங்கி அதிகாரி: வங்கி பணபரிவர்த்தனை ஆய்வு செய்வது தொடர்பாக அமலாக்கத் துறையினர் அழைப்பின் பேரில், இந்தியன் வங்கி அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வருகை தந்தனர். அமலாக்கத் துறை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் பொன்முடி வீட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள், வங்கியில் மேற்கொண்டுள்ள பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து கையில் பையுடன் வங்கி அதிகாரி வெளியே வந்துள்ளார்.
இதையும் படிங்க: "எங்க வேலை ரொம்ப ஈஸி" - பொன்முடி வீட்டில் ED ரெய்டு குறித்த முதல்வர் கூலாக பேட்டி!