சென்னை: எழும்பூரில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பினர் புதிய கல்விக் கொள்கை மற்றும் மருத்துவப் படிப்பு சேர்க்கை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைப்பின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கை குழுவின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். சமச்சீர் கொள்கைக்கு எதிராக உள்ள மாடல் பள்ளிகள் மற்றும் தற்போது உருவாக்கப்பட்டு வரும் மாநில கல்விக் கொள்கை மீது அமைச்சரவையைக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும். மாடல் பள்ளிகள் கலைஞரின் சமச்சீர் பள்ளிகளுக்கு எதிரானவை.
மாடல் பள்ளிகள் தமிழ்நாடு மாடல் இல்லை. அது வியாபார நோக்கம் கொண்ட டெல்லி மாடல். கல்வி என்பது அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆனால் மாடல் பள்ளிகள் அதனை செய்ய தவறுகின்றன. எனவே, அவற்றை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கக் கூடாது. மேலும் பல்கலைக்கழகங்கள் இணைப்பு பற்றியும், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் மாநில கல்விக் கொள்கை தற்போதைய நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி முறையை சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் கருத்தில் கொள்வது அவசியம்.
நீட் என்பது தகுதித் தேர்வு இல்லை. நீட் ஒரு சூதாட்டம் என்பதை முதலமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க முடியாமல் இருக்கிற சூழலில், பணம் இருப்பவர்கள் 200 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துவிட்டு மருத்துவப் படிப்புக்குச் சீட் வாங்குவதை முதலமைச்சர் மத்திய அரசிடம் கேள்வியாக எழுப்ப வேண்டும். முதலமைச்சர் இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.
அதனுடன் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதை எதிர்த்து முதலமைச்சர் கேள்வி கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலமைச்சர் மௌனம் காக்கக் கூடாது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை முதலமைச்சர் தனது நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையீடு இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு முறையான விளக்கம் வரவில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் கடிதத்திற்கான பதில் கடிதம், தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு தலைமைச் செயலகம் எங்களுக்கு அந்த கடிதத்தை வழங்கவில்லை. மேலும் நாங்கள் நீட் தேர்வு சம்பந்தமான கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்கும்போது, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்கிறார்கள்.
அதேபோல நீட் மசோதா குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளை இரண்டு முறை கேட்டு மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பும் போதும், அதற்கு உடனடியாக பதில் கடிதம் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் காலம் தாழ்த்துகிறார். இதனால் நீட் விவகாரத்தில் பாஜகவிற்கு திமுக துணை போகிறதா என்கிற சந்தேகம் எழுகிறது.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முழுமையாக எதிர்க்க வேண்டும். ஏனெனில் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒற்றை சமஸ்கிருத சமுதாயத்தை உருவாக்க புதிய கல்விக் கொள்கை முயற்சி செய்து வருகிறது. அதன் காரணமாகத்தான் அதை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்கிறோம். இதில் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூகுள் லொகேஷன் பேட்ஜ் பின் பெற்ற உலகின் 2ஆவது நபர் - சாமானிய இளைஞரின் வெற்றிக்கதை!