சென்னை: போர் தொழில் படத்தின் வெற்றி விழா இன்று (ஜூன் 30) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் போர் தொழில். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 30) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, "போர் தொழில் உலகம் முழுவதும் இதுவரை ரூ.50 கோடி வசூலித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு வெற்றி. தமிழகத்தில் இதன் வசூல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து காணப்படுகிறது. இப்படம் இந்த மாதத்தில் நிறைய திரையரங்குகளுக்கும் வெற்றிப் படமாக இருந்தது" என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசியபோது, "நல்ல படங்கள் நிறைய நடித்தாலும், வசூல் ரீதியாக பெரிதாக இருப்பதில்லை என்ற வருத்தம் இருந்தது.அந்த வருத்தத்தை இந்த படம் போக்கியது என்றவர் தனிப்பட்ட செலவிற்காக பணம் ஒதுக்கும் மக்களுக்கு எதாவது புதிதாக நடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க காரணம் என்றார். நடிகர் சரத்குமாருடன் நடிக்கும் போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மேலும் தெருக்களில் குறும்படம் எடுத்து கொண்டிருந்த நாங்கள் இன்று மேடையில் நிற்கிறோம். நம் வேலையை நம் செய்தால், நம் மரியாதை தன்னால் வரும் என்ற வசனம் தான் நியாபகம் வருகிறது" என்றார்.
நடிகர் சரத்குமார் பேசியபோது, "உலகளவில் மிகப் பிரம்மாண்டமான வெற்றிப்படம் என்றால் இந்த போர்தொழில் திரைப்படம் தான். சூர்யவம்சம், படையப்பா படத்திற்கு பிறகு இந்த காலத்தில் படத்திற்கு அதிக கூட்டம் வந்தது, போர் தொழில் படத்திற்குதான். இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டாலும் திரையரங்குகளில் நிறுத்தாமல் ஓட வேண்டும்" என்றார்.
மேலும் தேனப்பனின் நடிப்பு பற்றி பேசிய சரத்குமார், "தேனப்பனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும்" என்றார் . உடனே தேனப்பன் சரத்குமாரின் காலில் விழுந்து அதனை மறுத்தார். (இதனால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது). தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படங்கள், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் சிங்கக் குட்டியை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்!!