சென்னை: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து காவல்துறையில் ஆர்டர்லி முறை பின்பற்றப்பட்டுவருகிறது. இதன்மூலம் காவலர் பணிக்கு தகுதியானவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டுப் பணிகளை செய்வதற்காக பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டலிகள் அதிகாரிகளின் வீடுகளில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றிய 19 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டனர். இதனிடையே நேற்று ஆங்கிலேயரின் ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது என்றும் இந்த முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு ஆர்டர்லிகளை திரும்ப பெறாவிட்டால் சம்மந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்டர்லிகளை திரும்ப பெறுவது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டலிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம்