சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கற்றல் குறைபாட்டை போக்கவும், கற்றல் - கற்பித்தல் பணிகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளவும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவோருக்கு உதவிடவும் கடந்த 2019ஆம் ஆண்டு கல்வித் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது.
தினந்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், போட்டித்தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (CEO) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ற அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன், ஊடகவியல் அல்லது பத்திரிகைத்துறையின் பட்டப்படிப்பு முடித்த 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் மிக்க நபர்கள் CEO பதவிக்கு,
https://forms.gle/KPvFRsK5JHwf9gd68 என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் குறைவு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!