சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம் (29). இவர் செப்டம்பர் 27ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீது இருந்த காயங்கள் அனைத்தும், ஆயுதங்களால் வெட்டப்பட்டதுபோல இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகமடைந்து அமைந்தகரை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது பெயர் கணேசன் எனவும், இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தனது மனைவி, குடும்பத்தாரைப் பார்ப்பதற்காக சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கஞ்சா வாங்குவதற்காக செனாய் நகர் அருகே நண்பர் ஒருவருடன் சென்றபோது, அங்கு மறைந்திருந்த பிரபல பெண் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் பேரன் சந்திரசேகரன் (26), அவரது நண்பர்கள் தன்னை கத்தியால் வெட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்பு அங்கிருந்து தப்பி சேத்துப்பட்டிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றதாகவும், பிறகு சகோதரி உஷாவின் உதவியோடு மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், செனாய் நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, லிங்கம் கஞ்சா புகைக்கச் சென்றபோது அங்கு மறைந்திருந்த சந்திரசேகரன் (26), நிலேஷ் குமார் (22), விசுவாசம் (19), பாபா (19) ஆகியோர் வெட்டியது தெரியவந்தது.
மேலும் அப்பகுதியில் லிங்கம் குழுவினருக்கும், சந்திரசேகரன் குழுவினருக்கும் இடையே கோஷ்டி மோதல், கஞ்சா விற்பதிலும் மோதல் இருந்துள்ளது. இதன் காரணமாக லிங்கத்தின் மீது எதிர் தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்திரசேகர், விஷ்வா உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கணேசன் டி.பி. சத்திரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாயின் கண்ணெதிரே கத்திமுனையில் நண்பர்களோடு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி லிங்கம் என்கிற தகவலைக் கண்டறிந்த காவல் துறையினர், மருத்துவமனைக்கு விரைந்துவந்தனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து தப்பியோடிய லிங்கம் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
நீண்ட நாள்களாக வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி தன் பெயரை மாற்றி தப்பிச் சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. இருப்பினும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் எங்கும் தப்பிவிட முடியாது என நம்பிக்கை தெரிவிக்கும் காவல் துறையினர், தனிப்படை மூலம் லிங்கத்தை கைதுசெய்ய தீவிரம் காட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க:பாலியல் தொல்லை கொடுத்தவரை மிளகாய்பொடி தூவி கட்டி உதைத்த பெண்கள்!