சென்னை: சமீபத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்தது. இதன் காரணமாகப் பொதுமக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ளவர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களுக்கு முழுமையாக நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதே போல, திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் உள்ளவர்களுக்கும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் இன்று (டிச 15) டாேக்கன் வழங்கி உள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் மத்திய மற்றும் மாநில அரசு, மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்வாதாரம், துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் இழப்பு அடைந்திருந்தால், பாதிப்பு விபரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்கு உரிய நியாய விலைக் கடைகளில் கூறி விண்ணப்பிக்கவும் படிவங்கள் தயார் செய்து அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் (டிச.17) வரையில் டோக்கன் கிடைக்காதவர்கள் நியாய விலைக் கடைக்கு வந்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நியாய விலைக் கடைகளில் மழை நிவாரணமாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குருப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!