சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசு, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இணைந்து நடத்திய 'கனெக்ட் 2019' எனும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information and Communication Technology ICT) குறித்த சர்வதேச கருத்தரங்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கேபிஎம்ஜி அமைப்பு இணைந்து இயற்றிய ஆய்வறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். இதை தொடர்ந்து, பயிர்களில் பூச்சித் தாக்குதல்கள் குறித்து விவசாயிகளுக்கு தகவல் அளிக்கும் செயலி, பள்ளிகளில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் ஃபேசியல் ரெகக்னிஷன் (Facial Recognition) தொழில்நுட்பம், அரசு இ-சேவைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் 'சேட் போட்' (Chat bot), இ-சேவைகளைப் பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கும் யூடியூப் சேனல் ஆகியவற்றையும் அவர் தொடங்கி வைத்தார். அதன்பின், தமிழ்நாடு அரசு, அண்ணாப் பல்கலைக் கழகம், கேரளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " இந்தியாவில் அதிக அளவில் புதுமைகளைப் படைக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பல சாதனைகளைப் படைக்க இந்த மாநாடு உதவும்.
இந்த அரசு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. இதன்மூலம் 60 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி கடந்தாண்டில் மட்டும் 10 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் 4 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை முழுமையாகப் பெறும் வகையில் மாநில குடும்பத் தகவல் தொகுப்பு (state family database) உருவாக்கப்படும். பரிவர்த்தனைகளின் உண்மைத் தன்மையை அறிய பிளாக் செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். நம்பிக்கை இணைய கட்டமைப்பு (blockchain) உருவாக்கப்பட்டு அரசின் அனைத்துத் தரவுகளும் பாதுகாப்பாக வைக்கப்படும்.
'மக்களைத் தேடி அரசு' என்ற திட்டத்தில் ஆவணங்கள், சான்றிதழ்கள் மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எந்தவொரு தேவைக்கும் அரசு அலுவலகங்களை நாடாமல், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இணைய தளம் மூலமாக அனைத்து சேவைகளையும் பெற வேண்டும் என்பதே எனது கனவு. இங்கு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனங்கள் உருவாகும் வகையில் தமிழ்நாடு அரசு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை - 2018ஐ வெளியிட்டது.
இன்னும் சில நாட்களில், தமிழ்நாடு அரசு மின்னணு பாகங்கள் உற்பத்திக் கொள்கை (Electronic hardware manufacturing policy) வெளியிடவுள்ளது. 'இல்லந்தோறும் இணையம்’ எனும் திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளுக்கு 1 ஜிபி வேகம் கொண்ட 'ஃபைபர் நெட்' வசதி வழங்கப்படும். 500 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் அதிவேக இணையதள வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது. அடுத்த 18 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையும்" என்று கூறிய முதலமைச்சர், 'ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்காமல், மேலும் வேலை வாய்ப்புகளை தொழில் துறையினர் உருவாக்க வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழ்நாட்டின் தகவல் தொடர்புத் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல் தகவல் மற்றும் தகவல் தொடர்புத்துறையிலும் (ICT) கவனம் செலுத்தப்படுகிறது. இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் முதலமைச்சர் முனைப்புக் காட்டி வருகிறார். கல்வி, சுகாதாரம், கடல்வழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு நகரங்களுக்கும் இதனை எடுத்துச்செல்ல உள்ளோம். தமிழ்நாடு இ-சேவை முகமை, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தெற்குப் பிரிவுத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, தமிழ்நாடு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் நாளை நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு!