தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது சிஏஏ சட்டத்துக்கு எதிரான தீர்மானததை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், ” சட்டப்பேரவையில் முதலமைச்சர் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என சட்டமன்றத்தில் பேசி வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் இந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் அவர் மத நல்லிணக்கம் பற்றி பேசுகிறார்” என்றார்.