இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வில் 500க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கூறியதால் மன உளைச்சலுக்கு உள்ளான விக்னேஷ், வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் விக்னேஷின் தற்கொலைக்கு நீட் தேர்வும், அதைக் கட்டாயமாகத் திணித்து, தொடர்ந்து நடத்தி வரும் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களும் தான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியும். அவர்கள் தான் மாணவர் விக்னேஷின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டிருந்தால், விக்னேஷ் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நிச்சயமாக இடம் கிடைத்திருக்கும்.
ஒருவேளை தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்திருந்தால் கூட, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தனியார் கல்லூரியில் சேர்ந்திருக்க முடியும். இரண்டையும் செய்யத் தவறியவர்கள் தான் விக்னேஷின் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்றாக வேண்டும். எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசும், இந்திய மருத்துவக் குழுவும் கூறி வந்தனவோ, அந்த நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்பதற்கு மாணவர் விக்னேஷின் தற்கொலை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.
தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுக்கும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து ஏற்படும்.
இதைத் தடுக்க நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் முன்வர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.