சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த நிலையில் அதன் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு தீவிரப்படுத்தியது. மேலும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டனங்கள் வலுத்தன.
முறைகேடாக விற்கப்பட்ட சாராயத்தால் உயிருக்கு ஆபத்தான மெத்தனால் சேர்க்கப்பட்டதனை முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து இதில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழக்கவில்லை என்பதும் மெத்தனால் என்ற விஷசாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விவகாரம் குறித்து விஷச்சாராயம் விற்பனை செய்த வியாபாரி, மெத்தனால் வழங்கிய கெமிக்கல் ஃபேக்டரி உரிமையாளர் இளைய நம்பி உட்பட 17 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் தீவிர தன்மையை அறிந்து முதல்வர் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றாளிவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முதலவர் உத்தரவின் பேரில் விஷச்சாராயம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்குகளின் விசாரணை அதிகாரிகள், விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏடிஎஸ்பி மகேஸ்வரி விஷச்சாராய வழக்குகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக விஷச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்பட்ட இடம் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதே போல விஷசாராயத்தை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். சோதனையின் முடிவு விரைவில் வெளிவர உள்ளதாகவும், மேலும் இவ்வழக்கில் ஒரு சிலரை கைது செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சில ரசாயன ஆலையை கண்டறிந்து சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதன் பிறகு விஷச்சாராயம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "யார் ஆட்சியில் ஊழல் அதிகம்" - ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!