சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் உள்ள முருகனின் அறையில், கடந்த 2020ஆம் ஆண்டு சிறை வார்டன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முருகன், சிறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அரசு அலுவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என முருகன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கு மறுப்புத்தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முருகன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேலூர் நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.