சென்னை :ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான டாக்டர் எழிலன் தாக்கல் செய்த மனுவில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்றும், இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எமர்ஜென்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டம்:
1976 ம் ஆண்டு மொத்தம் ஐந்து முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் கல்வி முக்கியமானது. மாநில அரசுகளின் அனுமதியின்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது, இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இன்னுயிர் காப்போம் திட்டம் - டிச., 18 முதலமைச்சரால் தொடங்கப்படும்!