சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி அருண் மிஷ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய திருவாரூர் ஆட்சியர் காயத்ரி, தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தன், மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார், கோவை, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோருக்கு சிறப்பாக செயல்பட்டதற்கான விருதினை முதலமைச்சர் வழங்கினார்.
மேலும், ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சட்டத்தின் ஆட்சியை நீதியின் மூலம் நிலைநாட்டி அமைதி பூங்காவாக தொடர்ந்து இருக்க வைத்துள்ளார் முதல்வர்.
மனித உரிமை அவரவர் பிறப்புரிமை, அதை மதித்து நடப்பது அனைவரின் கடமை. எல்லோருடைய மனித உரிமையை காக்க திராவிட மாடல் அரசு உறுதி பூண்டுள்ளது. மனித உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் இருந்தால் அதை காப்பாற்றும் பாதுகாவலராக முதல்வர் விளங்குகிறார்.
சிறந்த முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே நன்மை பயக்கும் எனவும், இது மதசார்பற்ற நாடு, இங்கு அனைவரின் பண்பாடும் காக்கப்படும்” எனத் தெரிவிந்தார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உரையாற்றியபோது, ”மனித உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு வழிமுறைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனித உரிமைகளை காப்பாற்ற மக்கள் உயர்நீதிமன்றத்திற்கு வருவார்கள். மனித உரிமைகள் குறித்து அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மனித உரிமைகள் ஆணையத்தை உருவாக்கியவர் கலைஞர். மனித உரிமை காக்கும் மாண்பாளர் கலைஞரை நினைவு கூர்வது இந்தத் திட்டத்தில் பொருத்தமாக இருக்கும். சுயமரியாதை ஒவ்வொரு மனிதனுக்கும் உயிரினும் மேலானது.
தனி மனிதனின் சுயமரியாதை எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்பட கூடாது என உறுதியாக உள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல்வேறு உரிமைகளை அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. அந்த கடமையில் இருந்து ஒருபோதும் தவறமட்டோம். நீதித்துறையின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம்.
வழக்கறிஞர்களுக்கான சேம நிதி 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. நீதிமன்ற கட்டடம் வழங்க 4 ஏக்கர் நிலம் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். மாநில மனித உரிமை ஆணையத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
மனித உரிமை விசாரணை குழுவில் காவல்துறை எண்ணிக்கை அதிகரிக்க முடிவெடுக்கபடும். இது குறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். கொள்கை கோட்பாடுகள் குறித்து அனைவரும் அறிய பயிற்சி முகாம் ஏற்படுத்தப்படும். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன் வைத்தது தான். சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூக நீதியின் அரசாங்க அமைவது தான் மக்களின் அரசாக அமைய முடியும். மாநில மனித உரிமை சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின தலைவர் நீதிபதி பாஸ்கரன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள், செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!!