சென்னை வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் வசிக்கும் மூன்று குடும்பத்தினர் நேற்று மாலை காசிமேடு கடற்கரைக்கு விடுமுறை தினத்தை கழிக்க சென்றனர். இதில், ஜெனிபரின் இரட்டைக் குழந்தைகளான மார்ட்டின், மார்க்கிரெட். அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, துர்கா, அருள்ராஜ் ஆகிய ஐந்து பேரும் கடலில் குதித்து விளையாடினர்.
இவர்களது பெற்றோர் கடற்கரையில் உட்காந்திருந்தனர். குழந்தைகள் கடலில் குதித்து விளையாடியபோது, திடீரென எழுந்த ராட்சத அலை ஐந்து பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மீனவர்கள் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினரும் மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் கடலில் இறங்கி தேடிய இளைஞர்கள், 19 வயது நிரம்பிய அருள்ராஜ் என்ற இளைஞரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து நான்கு பேரை தேடும் பணி தீவிரமடைந்தது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம், எஸ்பிளேனட், மெரினா உள்ளிட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட நீச்சல் மீட்பு வீரர்கள் கடலில் இறங்கி தேடினர்.
மீட்புப் பணியில் இன்று (நவ. 16) காலை மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டது. சிறுமி துர்காவின் உடலை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் மீட்கப்பட்ட நால்வரின் உடலும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையா..? - பரபரக்கும் தேர்தல் அரசியல் களம்