சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகிய தலைவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ''கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது; இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள், தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.