சென்னை: விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரரை கொலை செய்ததாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலரின் மகன் உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பிரபாகரன் மற்றும் பிரபு ஆகியோர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளை துவைத்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக சென்ற நாகரசம்பட்டி பேரூராட்சி மன்ற திமுக கவுன்சிலர் சின்னசாமி, குடிநீர் தொட்டியில் வைத்து துணிகளை துவைத்துக் கொண்டிருந்த இருவரையும் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
பின்னர், கைகலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சின்னசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று, ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு மற்றும் அவர்களது தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில், படுகாயம் அடைந்த நான்கு பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை ராணுவ வீரர் பிரபு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர் தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நாகரசம்பட்டி காவல் துறையினர், கொலை (IPC 302) வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, ராணுவ வீரரை தாக்கி கொலை செய்த வழக்கில் திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன் புலிப்பாண்டி, தம்பி காளியப்பன், உறவினர் மாதையன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் சின்னசாமியின் மகன் புலிப்பாண்டி, சகோதரர் காளியப்பன், உறவினர் மாதையன் ஆகிய மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச்.09) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜரானார். தொடர்ந்து வாதிட்ட அவர், "கைதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடியுள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது" எனத் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி மீது கஞ்சா கேஸ்.. திருந்தி வாழும்போது எண்கவுண்டர் திட்டம்.? போலீசாருக்கு பயந்து வீடியோ வெளியிட்ட பிரபல ரவுடி..