தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சாா்பில், சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 22ஆம் தேதி 46ஆவது இந்திய சுற்றுலா, தொழில் பொருள்காட்சித் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 70 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது.
அதில், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கண்காட்சியில் சிறந்த அரங்காக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைத்த அரங்கு தோ்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக அமைச்சா் சி. விஜய பாஸ்கா், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பீலா ராஜேஷ் இருவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "தேமுதிகவுக்கு மாநிலங்களவை ஒதுக்கப்படாதது கட்சி எடுக்கும் முடிவுகள்தான். அதிமுக என்பது ஆலமரம், அதில் கூட்டணி வைக்க அனைவருக்கும் வாய்ப்புண்டு. திமுக போன்று கூட்டணியில் உள்ளவர்களை உதாசீனம் செய்யும் கட்சி இல்லை.
தேமுதிகவைப் பொறுத்தவரை கூட்டணி நிச்சயம் தொடரும். அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சுயமாக சிந்திக்கும் கட்சி, அதிமுகவுக்கு பாஜக மட்டும் இல்லை யாரும் அழுத்தம் தர முடியாது. அதிமுக-திமுக கருத்து மோதல் இருக்கலாம், அவை காழ்புணர்ச்சியாக மாறக்கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு