தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விரோதிகள் கைது , நுண்ணறிவு தகவல் சேகரிப்பு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு, தலைவர்கள் பரப்புரையின் போது பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு தமிழ்நாடு டிஜிபி திரிபாதி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும், தேர்தலுக்காக செய்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பலரிடம் பாராட்டை பெற்று வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எந்த வித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் அர்ப்பணிப்போடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் கடமை தமக்கு உள்ளதாகவும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கரோனா பிடியிலிருந்து மீட்க உழைப்பீர்கள் என நம்புவதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!