சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் தேவயானி, நர்சிங் பட்டதாரி. இவருக்குத் தோழி ஒருவர் மூலம் சாலிகிராமத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் அலுவலகம் நடத்தி வரும் பாபு மற்றும் அருண்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமாகி உள்ளனர்.
அப்போது அவர்கள் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் பணிக்கான காலி பணியிடம் உள்ளது என்றும், அங்கு சென்றால் மாதம்தோறும் ரூ. 3 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைக் கூறி உள்ளனர். தனது குடும்பம் வறுமையில் தவித்து வந்ததால் நர்ஸ் வேலையைத் தனக்கு வாங்கித் தருமாறு கேட்ட தேவயானி, அதற்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பணத்தை பாபு மற்றும் அருண்குமாரிடம் கொடுத்து உள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும் ஒரு மாதம் கழித்து வேலை கிடைத்துவிட்டதாகக் கூறி "ஜாப் ஆஃபர் லெட்டர்" ஒன்றை தேவயானியிடம் கொடுத்தனர். இதையடுத்து துபாயில் உள்ள நிறுவனத்தைத் தேவயானி தொடர்பு கொண்டபோது தான் அது போலியான "ஜாப் ஆஃபர் லெட்டர்" என்பது தெரியவந்தது. போலியாக ஜாப் ஆஃபர் லெட்டர் கொடுத்து தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டு இருப்பதை தாமதமாக அறிந்து கொண்ட தேவயானி அதிர்ச்சி அடைந்தார்.
தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்கச் சென்ற தேவயானியிடம், “போலீசில் புகார் கொடுத்தால் உன்னை கொலை செய்து விடுவோம்" என்றும் அவர்கள் இருவரும் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதை அடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாபு மற்றும் அருண்குமார் இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தேவயானி புகார் அளித்தார்.
இது தொடர்பாக விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், அருண்குமார், பாபு இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இதுபோன்று பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாபு மற்றும் அருண்குமார் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
சமீப காலமாக வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பலரும் துவக்கத்திலேயே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, பணத்தை மட்டும் இழக்கும் நிலையில், பலர் விசிட்டிங் விசாவில் வெளிநாட்டிற்கு மோசடி நிறுவனங்களால் அனுப்பப்பட்டு அங்கு போலீசில் சிக்கித்தவிக்கும் அவலமும் நிகழ்கிறது.
இதையும் படிங்க: வீடியோவிற்காக கிணற்றில் குதித்த இளைஞர்; நீச்சல் தெரியாததால் பலியான சோகம்!