சென்னை தலைமைச் செயலகத்தில், கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பு செய்வது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் பேரவையில் கொண்டு வரப்பட்டது. அதில் பாமக தலைவர் ஜிகே மணி, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டில் தற்போது 8 எண்ணெய் மற்றும் எரிவாயு பதிக்கும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எஸ்பிசிஎல், கெயில் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது நான்கு திட்டங்கள் முடிவுறும் நிலையில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கெரியப்பன் கிராமத்தில் எரிவாயு குழாய் பதிப்பு, தொடர்பாக பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து, கணேசன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். பொதுவாக இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது. இது குறித்து அண்மையில் நடைபெற்ற ஒன்றிய எண்ணெய் மற்றும் எரிவாயு செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்திப் பேசப்பட்டது.
நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டு, தற்போது அதற்கான மறுசீரமைப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இத்தகைய துயரச்சம்பவம் நடந்து இருக்கிறது. வேளாண்துறை அமைச்சர் இழந்த விவசாயி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்து, அரசின் நிவாரணத்தொகையான ரூ.5 லட்சத்தை வழங்கியுள்ளார். பெருங்குடி மக்களுக்கு உற்றத் தோழனாக இந்த அரசு திகழும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை - சட்டப்பேரவையில் ஸ்டாலின்!